Saturday, January 12, 2013

எரியும் ரோஜாக்கள்

தன் வீட்டு ரோஜா செடிகளுக்கு
தண்ணீர் ஊற்ற பொட்ரோல் தேசத்து
எண்ணெய்கிணறுகளில்
எரியும் ரோஜாக்கள்

கண்ணீரோடு தண்ணீர் தேடி
விமானம் ஏறும் முன்பு
பலரும் முயற்ச்சிப்பதில்லை
தன் தோட்டத்தில்
தானே ஒரு கிணறு தோண்ட...

ஞாயிற்றுக் கிழமை மட்டன் கறி
வெள்ளிக் கிழமை பிரியாணி
விக்கலில்லாம் முழுங்கும் போது
யாரும் நினைப்பதில்லை
தன் வீட்டு குடிமகனின்
குடி கெட்டுக்கொண்டிருப்பதை

சாப்பிடும் சமயத்து நினைவுப்பிறழலில்
சிறுமூளைக்கும் பெரும் மூளைக்குமான
சண்டை சச்சரவில் மூட மறந்த
உள் நாட்டு சங்கதியின்
புரையேற்றங்களில்
மனைவி நினைப்பதாய்
மகிழும் போது…
புது சாரியின் பார்டருக்கு
மேட்சாய் சட்டைத்துணியில்லை...
கவலைப்படும் மனைவி!

வரதட்சணை விரும்பிகளுக்கு
தங்கையை தாரை வார்ததபோது
அவள் கழுத்தில் தொங்குகிறது
மொழுவர்த்தி வெளிச்சத்தில்
உருக்கிய தங்கம்

புதிதாய் கட்டிய வீட்டில்
பால் காய்ச்சும் நெருப்பில்
இளமைகளும்
எரிந்துகொண்டிருக்கிறது

உற்றாரும் உறவினரும்
உயிரோடிந்தாலும்
லேசான தலைவலிக்கும்
கடுமையான காய்ச்சலுக்கும்
ரூம்மெட்தான்….
அம்மையும் அப்பனும்
மனைவியும் பிள்ளைகளும்

கடைசி நேரத்தில் எழுந்து
கண்டதை அணிந்து
கால்கடுக்க ஓடும் போது மனதில்..
வெள்ளை வேட்டியும்
சலவைச் சட்டையும்
பூரூட் மணமுமாய்
களித்திருந்த
வெள்ளிக் கிழமை ஜீம்மாக்கள்

உறக்கம் வராத இரவுகளில்
ஆசையாய் அணைத்துக் கொள்ள
இன்னுமொரு தலையணைகூட இல்லை
ஊருக்குப் போகும் போது
காலுக்கு என்று தேடித்தேடி
வாங்கிய டிசைன் போட்ட
தலையணைகள்

பால் வார்க்க பாலையில் யாருமில்லை
விம்மலும் முனங்கல்களோடும்
முடிந்து போகிறது அன்றைய தினங்கள்

மொழுகுவர்த்திகள் ஏற்றுமதி நின்றபடில்லை
ஏர் போர்ட் போக ரெடியாகும் தோழன்
தன் வீட்டு ரோஜா செடிகளுக்கு தண்ணீர் உற்ற
வேனல் அடுப்புகளுக்கு விறகு ஆக...
இன்றைய விமானத்தில்
முதுமையில் திரும்பிச் செல்ல
இளைமையில் வருகிறது ஒரு புதிய ரோஜா!

கண்ணீரோடு தண்ணீர் தேடி
விமானம் ஏறும் முன்பு
பலரும் முயற்ச்சிப்பதில்லை
தன் தோட்டத்தில்
தானே ஒரு கிணறு தோண்ட…

இந்த பஸ் எங்க போவு...?


மல்லிகை பூவும், மரிக்கொழுந்து வாசமும் மணமணக்கும் நாகர்கோவில் நேசமணி பஸ் நிற்க்கும் அண்ணா பஸ் நிலையத்தின் மாலைப் பொழுது.

7D பள்ளியாடி பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த பெஞ்சில் ஒரு பாட்டி, வெத்திலை மென்று சுவரெங்கும் துப்பும் ரகம். ஒவ்வோரு பஸ் வந்து அந்த பகுதியில் நிறுத்தும் போதும். பக்கத்தில் போவோரிடம்

“இந்த பஸ் எங்க போவு? “ என்று கேட்டுக் கொள்வார்.

என்னிடமும் இரண்டு மூன்று முறை கேட்டாகிவிட்டது, நானும் அலுக்காமல் “பூதப்பாண்டி, திங்கட் சந்தை, குளச்சல் என்று சொல்லி அலுத்து விட்டேன், நான் அலுத்து போனதை முகத்திலும் காட்ட பாட்டி என்னிடம் கேட்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்

வழக்கம் போல் நான் காத்து நிற்க்கும் பஸ் தாமதமாக வந்து அடித்து முடித்து ஏற முற்பட்டோர் எல்லோரிடமும். பஸ் கொஞ்சம் தாமதாமாகத்தன் போகும் என்று கண்டக்டர் சொல்ல, காத்திருந்தவர்கள் மீண்டும் காத்திருக்க, கூட்ட நெரிசலில் முந்தியடிப்பவர் வேகத்தை குறைந்துக் கொண்டார்கள்.

எனக்கும் நண்பர்களுக்கும் பஸ் புறப்படும் நேரம் மட்டும் ஒரு இரண்டு ஸ்டெப் ஓடி போய் ஏறும் பழக்கம், அப்படி ஏறாமல் நேரமே இடம் பிடித்து உள்ளே போய் உட்கார்ந்திருந்தால் என் இளமைக்கான யோக்கியதை குறைந்து விடும் என எண்ணியதே அதற்க்கு காரணம்.

எனவே, நேரத்தை போக்க வேடிக்கை பார்ப்பது போல்….
காலையில் வைத்த ரோஜா வும் மல்லிகையும் பிச்சியும் கசங்கி அதன் மணம் அத்தனையும் கல்லூரியின் வகுப்பறைகளாலும், வராந்தாக்களாலும், நுகரப்பட்டதால் கதம்ப மணமிழந்து வாடித் தொங்கும் கூந்தல்களுக்கு சொந்தக்காரிகளான என் சக மங்கையர்கரசிகள் உலாத்திக் கொண்டும் உட்கார்ந்து கொண்டுமிருந்தார்கள்.

அவர்களில் பலர் என்னை ஏறெடுத்தும் பார்ககவில்லை என்றாலும் நான் பராபட்சமின்றி அவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னுடன் வேலைப் பார்க்கும் சில முகங்கழும், அதில் உண்டு என்பதால் கொஞ்சம் அடக்கியிம் வாசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் உண்மையாக இருந்திருக்க வேண்டும்.

என்றாலும் அவ்வப்போது பக்கத்து பாட்டியையும் ஒரு கண் பார்க்கத்தவறுவதில்லை, காரணம், பாட்டிக்கான பஸ் வந்ததா என்ற அக்கரையே..!

எல்லா பஸ்ஸும் வருவதும் போவதுமாக இருக்க பாட்டியின் ஊருக்கு போகும் பஸ் வேறு பகுதியில் நிற்க்குமோ! என்று எனக்குள் எழுந்த சந்தேகத்தால் பாட்டியிடம் சென்று உங்களுக்கு எங்க போகணும் என்றேன்…

பாட்டி போட்ட போடு, என்னை தூக்கி வாரிப் போட்டது…

பாட்டி அமைதியாக சொன்னாள் மக்கா… எனக்கு வடசேரி போகணும் என்று.

நான் சொன்னேன் இங்கு வந்து சென்ற எல்லா பஸ்ஸூம் “வடசேரி” போய்த்தானே போகும் என்று, பாட்டியோ…

பாழாய்ப் போனவனே உங்கிட்டயும் எத்தனை தடவை கேட்டேன்.

”இந்த பஸ்ஸு வடசேரி போகும்ன்னு” நீ சொல்லவேயில்லையே?

பாட்டியிடம் நான் கேட்டேன்

“வடசேரி” தான் போகனும்னு நீங்களும் சொல்லவேயில்லையே…!!!

சற்றும் நேரம் மொனமாக இருந்த பாட்டி தன் தவறை புரிந்திருக்க வேண்டும்… நான் போக வேண்டிய பஸ்ஸைக் காட்டி

இது ”வடசேரி” போகுமா என்று இந்த முறை சரியாகக் கேட்டார்..!!!

இறையருளால்...!!

நசுக்க நினைத்ததெல்லாம்
பஞ்சு மூட்டைகளாலல்ல
பாறைகளால்... ஆனாலும்
இறையருளால் துளைத்தே
துளிர்விடுகிறோம்

மைல் கற்களெல்லாம்
பக்கத்தில் நடப்பட்டதல்ல
வெகுதூரத்தில் பதிக்கப்பட்டவை
இறையருளால் களைக்காமல்
நடக்கிறோம்

சுற்றி இருப்பது
சுத்தமான காற்றல்ல
அசுத்தம் கலந்த வாய்வு
இறையருளால் பிரித்தே
சுவாசிக்கிறோம்

சங்கங்கடங்களில்லாமல்
சந்தோசம் மட்டுமே
நிறைந்த வாழ்க்கை
சலித்துப் போகும்
இறையருளால் கலந்தே
வாழ்கிறோம்.

குண்டூசி


வாப்பும்மா கண்விழித்த போது முதலில் கண்ணில் பட்டது குளுக்கோஸ் ஸ்டாண்டு அப்புறம்தான் கவனித்தாள், தான் ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கிறோம் என்று, உற்றாரும் உறவினரும் சுற்றி நிற்க்க வாப்பும்மா குழப்பத்தில் மேல் கூரையில் விழுமா விழாதா என கர்ண கொடுர சப்தத்துடன் கிறங்க்கும் அந்த பழைய காலத்து பேனை உத்து நேக்கிய படி எதையோ மனதில் போட்டு குழப்பி யோசித்துக் கொண்டிருந்தாள்….

எனக்கு என்ன நேர்ந்தது… ம்ம்… கடையாக அந்த அறையை தூத்ததும், அப்போது கண்ணில் பட்ட அந்த சின்ன குண்டூசியை கையில் எடுத்ததும், இதை எங்கே வைக்கலாம் என்று நினத்தனும்… அதை எங்கோ பத்திரமாய வைத்தும்.. அதன் பின்பு என்ன நடந்தது என்று எதுவுமே ஞாபகமில்லை.

கரண்டு அதிக நேரம் தொலைந்து போவதோடு இரவு நேரங்களில் அதிக நாட்களில் கரண்டு போனவுடன் முழிப்பு வந்து விட்டால் அப்புறம் தூங்க முடியாமல் சுப்ஹூவரை முழித்து கிடப்பதே வாடிக்கையாவிட்டது வாப்பும்மாவுக்கு.

இன்று ஞாயிற்றுக் கிழமை பேரப்பிள்ளைகள் வீட்டில் நிற்க்கும் நாள்,

இன்றைக்கு கடைக்குட்டி பேரனை சரிக்கட்டி வேண்டாத சாதனங்களை வேண்டும் என்று சாக்கு முட்டைக்குள் போட்டு கூட்டி வைத்திருக்கும் அந்த பூட்டிக் கிடக்கும் அறையை கிளீன் பண்ணினால், இரவில் அங்கு தூங்கலாம் அந்த அறையின் ஜன்னலை திறந்தால் வேப்பமரத்திலிருந்து வரும் காற்று மட்டுமே போதும் கரண்டு வேண்டாம், காற்றாடி ஓட என்று முடிவு பண்ணி.

பேரனிடம் ” நீ மத்தியானம் சாப்பிட்டுட்டு எங்க போற ? “

”ஏன்… இப்ப எதுக்கு கேக்க…?”

“எனக்கு நீ ஒரு உபகாரம் செய்யனும்”

“எனக்குத் தெரியும், என்ன உபகாரம்ன்னு உன்ன கொண்டு போயி சின்னம்மா வீட்ல விடனும் அதுதானே… அதெல்லாம் முடியாது நான் பிரண்ஸோட சினிமா போறேன், ஏற்கனவே எல்லாவண்டையும் சொல்லியாச்சு, நீ இடையில வந்து குழப்பாதே.. ”

”மோனே… நீ சாயங்காலம் படத்துக்குப் போ! நான் பைசா தாரேன் வரும் போது உனக்கு என்ன வேணுமே சாப்பிட்டுக்கோ எங்களுக்கு ஆரியபவன் - ல இட்லி வாங்கிட்டு வா…, அதுகுள்ள நாம் ரெண்டு பேருமா அந்த படிக்கட்டு பக்கமுள்ள ரூமை கிளீன் பண்ணிரலாம்”

ஏற்கனவே படம்பார்க்கவே பட்ஜட்ல பைசா இல்லாம பசங்ககிட்ட அட்ஜெட்ஸ் பண்ணலாம் என்றிருந்த பேரனுக்கு “வாப்பும்மாவின் இந்த டீல் ரெம்ப புடிச்சிருந்தது “ இன்ன வாரேன்னு பைக்கை எடுத்துட்டு பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயி விசயத்தை சொல்லி முதல் காட்சி படத்துக்கு போகலாம் என்று முடிவு பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்து வரிந்துகட்டிக் கொண்டு ரெடியானான் வாப்பும்மாவுடன் ருமை கிளீன்பண்ண….

வாப்பும்மா, வின் தடாலடி உத்தரவுகளால் திக்குகுக்காடி போனாதாலும் இதத்தூக்கு, அதத்தூக்கு என்று குறுக்கு முறிய வேலை வாங்கினாதாலும் பீரிட்டு வந்த கோபத்தை பாரத் புரோட்டா ஸ்டாலின் “பரோட்டா, கொத்துச் சிக்கன்” ஆசை வந்து சமாதப்படுத்த பல்லை கடித்துக் கொண்டு கடிவாளம் பூட்டிய குதிரை மாதிரி எல்லாவற்றை கேட்டு ஒரு வழியாக அந்த அறையில் கூடிக்கிடந்த சாதனங்களை அட்டைப் பெட்டியில் அடுக்கி வேறு இடத்துக்கு மாற்றியாகிவிட்டது இனி மிச்சம் தூசியாக கிடக்கும் தரையை தூத்து(பெருக்கி) சரி செய்ய வேண்டும், அதை வாப்பும்மா நான் செய்கிறேன் என்று ஏற்றுக் கொண்டதால்…

“சரி ருவா.. எடு நேரமாச்சு நான் போறேன்! “ வாப்பும்மா கொடுத்த ரூவாவை வாங்கிக் கொண்டு ஒரு குளி போட்டுட்டு பிரெஸ்ஸா படத்துக்கு போகலாமென்று வீட்டின் பின்பாகத்து குளியறைக்கு ஓடினான்.

அதன் பின்பு நடந்ததுதான் அது…..

வாப்பும்மா.. வாருலயும் குப்பதட்டையும் எடுத்துட்டு ரூமை பெருக்கத்துவங்கினாள்.. அப்போது கண்ணில் பட்டது அந்த “குண்டூசி” அதை எடுத்த வாப்பும்மா இதை எங்க வக்க யாருக்கு காலுலையும் குத்திரகூடதே என்று பத்திரமாய் வைத்த இடம் “ப்ளக் பாயிண்டின் ஓட்டையில்” அப்போது கரண்டு இருந்ததால் இப்போது வாப்பும்மா ஹாஸ்பிட்டலில்.

சுற்றி நின்ற கூட்டத்தில் படம் பார்க்கப் போகாமல் கடைக்குட்டி பேரனும், வாப்பும்மாவின் நிலை பார்த்து கண்களில் நீர் தழும்ப...

Tuesday, December 4, 2012

வெந்து போன சிறகுகள்!

நான் கவிதைகள்
கிறுக்கத் துவங்கியதன்
காரணமே நீதான்...

நீ என் கவிதைகளை
சுவாசிக்கும் போது...
உன் கன்னக் குழிகளின்
சிரிப்பில் விழவே!

நாம் இதயங்களை இடமாற்றம்
செய்து கொண்டபோது
உலகமே எனக்கு வசப்பட்டதாய்
உணர்ந்து நெகிழ்ந்தது
இன்றும் நினைவில்...

தாண்டமுடியாத உயரங்களை
இலகுவாய்த் தாண்டினேன்
நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்
என்பதற்க்காக…

விண்ணை கூட தொட்டிருப்பேன்
நீ நிலா வேண்டும் என்று
அடம் பிடித்திருந்தால்….

வீசும் தென்றலும்
விண்மீன் அழகும்
பூவின் மணமும்
எனக்கு இரண்டாமாயிற்று
உன் அருகாமையில்
அகப்படும் போது

குழந்தையின் முதல்
உச்சரிப்புக்கு காத்திருக்கும்
தாய்போல்
காத்திருந்திருக்கிறேன் - உன்
காதல் கடிதங்களின்
கனவுச் சொற்களை
கண்டு மகிழ…..

தலை நிமிர்ந்து வாழ்ந்த நான்
ஒவ்வொருமுறையும்
என் அறையின்
கதவுகள் திறக்கும் போதும்
தபால்காரன் வீசி விட்டு போன
உன் கடிதங்கள் தேடி
தலை குனிந்திருக்கிறேன்

உன்னையே அடைந்து
உவகையாய் வாழ!
உறுதியாய் நானிருந்தேன்
உன்னில் உறுதி அதை
உறுதி செய்யாதால்
உமையாய் அழுகிறேன்
உன்னோடில்லாமல்…

நீல வானத்தை
நீ எனக்கு
அறிமுகப்படுதியபோது
வேகமாய் வளர்ந்த சிறகுகள்
வெந்து போனது
உறுதியில்லாமல்
கசிந்த உன் காதலின்
வேனல் காற்றில்

ஆனாலும்...
மெய்யான உன் நினைவுகள்

எனக்குள் பொய்யாது
பெய்கிறது அவ்வப்போது
கவிதை மழையாய்...

Wednesday, November 28, 2012

அல்வா..!!

(ஒரு குட்டி காமெடி(?)க் கதை)

உம்மம்மாவுக்கு அந்த செம்பு பூண் போட்ட உலக்கையில் சம்பந்தி அரச்சாத்தான் சோறே உள்ள இறங்கும். சம்பந்தி அரச்ச கையோடு அதை கழுவி துடைச்சு பத்திரமா சாய்ப்பு மூலைல வக்கலைன்ன என்னவோ போலிருக்கும்.

மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் வந்த பிறகும் இன்னும் ம்மம்மா அந்த உலக்கையில் அரச்ச சம்மந்தியில்லைன்ன சாப்பிடும் இடத்த
இரண்டாக்காம்ம இருந்ததேயில்ல.

என்னைக்காவது ஒரு நாள் கொஞ்சம் சோம்பிப்போயி மிக்ஸில சம்மந்தி அரச்சுக் கொடுத்தா, அன்றைக்கு மட்டன் பிரியாணி இருந்தாக் கூட எனக்கொண்ணும் வேணாம் என்று உள் குத்தில் குத்தி ஆயிரம் பேசுவாள். சம்மந்திக்கு பிறகு ம்மம்மாவுக்கு பிடித்தது அல்வா, இந்த வயசிலும் அல்வான்னு சொன்னாலே ”எங்கல மக்கா” ன்னு கேட்டு கொதியேட தன் பொக்க வாய் அழகில் சிரிப்பா.

பேரனுக்கு கல்யாணம்…!

சிறப்பாய் நடந்து முடிந்தது, மனைவிடன் வீட்டுக்கு வந்த பேரன் கூடவே கொண்டு வந்தான் உம்மம்மாவுக்கு வில்லங்கத்தையும், அதுவும் ம்மம்மா தானே இழுத்துப் போட்டுக் கொண்ட வில்லங்கம்.

கல்யாண பேச்சு எடுத்த நாளிலிருந்தே, சீர் வரிசைக்கு என்னென்ன வேணும் என்ற லிஸ்ட் தயாரிப்பில் மூம்மூரமாக இருந்த ம்மம்மா தீர்மானமாய் சொன்னது செம்பு உருளியிம் அந்த உருளி நிறச்சு அல்வாவும்.

மம்மமாவின் தீர்மானம் தீக்கப்படலைன்ன, உள்குத்தில் பேசி அது அவள் கடைசி நாள் வரை நீண்டு, அது வீட்டின் கடைசி பேரன் வரை காதடைக்க வைக்கும். எனவே கண்டிப்பாய் சொன்னதால், கல்யாணம் முடிந்த அன்று பெண்ணை அனுப்பும் போது கூடவே பெண் வீட்டார் ஒரு புதிய உருளி நிறைய அல்வாவவும் கிண்டி கொடுத்து விட்டார்கள்.

வீட்டின் மூலையில் வைக்கப்பட்ட அந்த அல்வா உருளி எல்லோரையும் உசுப்பேத்திக் கொண்டே இருந்தது மறுநாள் மாலைவரை,

கூடவே வந்த செந்துளுவன் குலையும், மையும், சந்தணமும் தேய்ச்சு வந்த வெத்திலையும் கல்யாண வீட்டின் களையை கூட்டியதோடு அதன் மணத்தோடு, மல்லிகைப்பூ வாடிய வாசனையும் சேர்ந்து ஒரு வித மயக்கத்தை அங்கு வருவோருக்கு உண்டாக்கியது.

ம்மாம்மாவுக்கு எந்த மணமும் அடிக்கவில்லை ஆனால் அல்வா வின் மணம் மட்டும் தெளிவாக மிக மிக தெளிவாக மூக்கை நுழைத்து நோண்டிக் கொண்டே இருந்ததால், பல தடவை சொல்லிப் பார்த்து விட்டாள் பலரிடம், யாரும் அந்த அல்வாவில் ஒரு பீஸ் வெட்டிக் கொடுக்கவில்லை.

மறுநாள் கல்யாண வீட்டின் களைகள் கொஞ்சம் குறைந்து, நெருங்கிய உறவினர்கள் மட்டும் இருந்த அந்த சபையில் “சீர் வரிசையாக வந்த பொருட்களை” தன் பெருமையை பறைசாட்டும் விதாமக அடிக்கி வைக்கப்பட்டு இருக்க. உண்மையில் அல்வா மணம் மட்டும் ஒரு படி மேல் வந்து எல்லோரின் ஆர்வத்தையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது, குறிப்பாக ம்மம்மாவுக்கு.

அந்த தருணம் வந்தது வாளையிலை கொண்டு மூடப்பட்டு வாழை நார் கொண்டு கட்டியிருந்த அதன் அகன்ற வாய்கட்டை யாரோ , பிரித்தெடுக்க… வாழையிலிருந்து நெய் கீழே கொட்டியது.

பொறுமையிழந்த ம்மம்மா மக்கா அந்த வாழையிலையை இங்க தா என்று வாங்கி அதை மோந்து பாத்து ம்…ம்… என்று அந்த வாசனையில் சொக்கிப் போய் அல்வாவை தின்னும் ஆர்வத்துடன் உருளியை பார்த்தாள்…

அல்வா…!, குங்குமப்பூ கலரில் நெய்வடிய தழதழ என உருளியில் திரண்டு கிடந்தது, மேலே முந்திரிப் பருப்பு பென்னிறத்தில் மிதக்க அதன் மணம் மண்டையை குடைந்தது….

கட்டை பிரித்தவரிடம் யாரோ கத்தியை நீட்ட, அதை வாங்கி அல்வாவை வெட்டத்துவங்கிய போது அது நடந்தது..

அல்வா வில் கத்தி வெட்ட அடம்பிடித்தது, எவ்வளவோ முயற்ச்சித்தும் ஒரு சின்ன கீச்சல் கூட விழாமல், “சபைர் கிரிஸ்டல்’ கண்ணாடி பதித்த புதிய ரேடோ வாச்சியின் மேல் பாகம் போல அல்வாவின் மேல் பாகத்தில் கத்தி வழுக்கிக் கொண்டு போனது.

பலர் நான் வெட்டுகிறேன் பேர்வழி, என்று முயற்ச்சித்தும் முடியாமல் போனது.. ம்மம்மாவுக்கோ தர்ம சங்கடம் “பெண் வீட்டாரின் மூத்த குடிமகன் முதல் கடைசியாய அந்த அல்வாவை வாழையிலை கொண்டு மூடிய சமையல் ஆள் வரை திட்டி தீர்த்துவிட்டாள்….ம்..ஹீம்பிரயோஜமில்லை அல்வா உருளியை விட்டு வர மறுத்தது..

கடைசியாக மூன்று நான்கு கத்திகளை ஒடித்தும், இரண்டு மூன்று கரண்டிகளை வழைத்தும் அல்வா… கொடாக்கண்டனுக்கு விடாகண்டனாய் அப்படியே பழபழன்னு இரும்புக் கிண்ணம் மாதிரி ஒட்டிக்கிட்டிருக்கு உருளியில், ஆனா மணம் மட்டும் நாலூருக்கு அடிக்குது.

அப்போது தோன்றியதுதான் ம்மம்மாவுக்கு அந்த புத்தி! நான் இப்ப வாரேன் என்று எழுந்து போனவள் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தது அவள் ஆசையாய் சம்மந்தி இடிக்க வைத்திருந்த அந்த செம்பு பூண் போட்ட “உலக்கை” .

கூட்டத்தில் சுற்றிச் சுற்றி பார்த்து கடைசியா, இரண்டு வருஷாமா ஜிம்மில் ஜம்ப் பண்ணுகிறேன்னு வீட்டில் வந்து எல்லா வெயிட்டான சாதனங்களையும் தூக்கி தூக்கி பாத்தும் பலம் போதாது என்று தினமும், ஆறு முட்டையும்,ஆறு கிளாஸ் பாலும் சாப்பிட்டு வீட்டு பட்ஜெட்டை வீணடிக்கிற கடைகுட்டி பேரனை அதுவரை கண்றாவியாய் பார்த்துக் கொண்ருந்த ம்மம்மா இவந்தான் இதுக்கு சரியான ஆள் என்று அவனிடம் உலக்கையை கொடுத்தாள்…

“மக்கா இந்த உருளியில் இருக்கும்அல்வா மேலே உன் பலமெல்லாம் கூட்டி ஒரு போடு போடு…” என்று ஆவேசமாய்ச் சொல்ல.

எதோ தன் விட்டில் அனைவருக்கும் தன் பலத்தை சாதனையாக்கிக் காட்ட வேண்டும் என்று கொஞ்ச நாளாய் காத்திருந்த அந்த கடைக்குட்டி பேரனுக்கு அடித்தது சான்ஸ்

எல்லோரையும் விலகிக் கொள்ளுங்கள் என்று சொல்லி, அவன் தகுதிக்குட்பட்ட எல்லா பந்தா வையும் காண்பித்து உலக்கையை ஓங்கி ஒரு போடு போட்டான் உருளியில் ஒட்டிக் கொண்டிருந்த அல்வாவின் மேல்… என்னவொரு அதிசயம்... ஆச்சரியம்.... உடைந்து சின்னா பின்னமானது........ஆனால்….

அது அல்வா......அல்ல....ம்மம்மாவுக்கு சம்மந்தி அரைக்கும் ”உலக்கை.”

சிறைப்படுத்தும் சின்ன நூற்கண்டு..

அழகான ரோடுகளும்
அங்காங்கே வழிகாட்ட
போர்டுகளும் இருக்குமென்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
வாகன ஓட்டுனர்களுக்கு

வாழ்க்கையுலும்
இலகுவான கிடைத்தல்களும்
வழிகாட்ட மனிதர்களும்
உண்டெண்டால்
வளமாய் வாழலாம்தான் - ஆனால்
அதில் ஆச்சர்யப்படும்
ஆனந்தமிருக்காது

முட்களும் கற்களும்
வாரியிறைக்கப்பட்ட
பாதைகளில் நடக்கத்
தெரியவில்லை என்றால்
வெற்றி என்பது விலகியே
இருக்கும்....

வீட்டில் மூலைகளில்
முடங்கிக் கிடந்தால்
வம்பும் தும்புமில்லை
பொதுவில் வந்து
பொதுநலம் என்றால்
தலையில் விடியும்
விமர்சன வெடிகள்

விமர்சனங்களும்
வீண் பழிகளும்
புகழாரங்களும்
வடங்களாய் நம்மை
வரிந்து கொண்டால்
வாழ்க்கை என்பதில்
சாதனைகளில்லை..
நூற்கண்டுகளா என்னைச்
சிறைப் படுத்துவது - என
அறுத்து எறிந்து விட்டு
சவால்களை சந்திப்போம்..

சரிந்த போதெல்லாம்
சாய்ந்து கொள்ள
தோள்களில்லாமல்
தன்னந்தனியாய்
தவழ்ந்து நடந்து
குருதிக் கால்களும்
வியர்வை தேகங்களூம்
மூச்சு முட்டல்களிலும்
முழுதாய் வெற்றி வரும் போது
அறிந்து கொள்ளலாம் - அது
எத்தனை ஆனந்தமானது என்று...

வீசியெறியப்பட்ட
பழங்களின் சுவை
தின்பவனின் பசியில்..
விதைத்து தெளித்து
கொய்யப்பட்ட கனிகளில்
தித்திக்கும் சுவை...

வெற்றிகளின் கர்வத்தை
தலையிலேற்றாமல்
மனதில் மட்டும் மகிழ்ந்து
அது இறைவனின்
அருட் கொடை என - அவனுக்கு
நன்றி சொல்லி விட்டு
மீண்டும் துவங்குவோம்..!

Sunday, November 18, 2012

இலக்கை நோக்கிய ஓட்டம்!

கால் போன போக்கிலே
நடந்து கொண்டிருந்தேன்...

வலிகள் தாளாமல்
திரும்பிப்பார்ததபோது
தன்னைச் சுற்றி
ஒரு வரண்டு பரந்த நிலம்
தனி மரமாய் நான் மட்டும்

தொண்டை வரண்டதால்
மண்டை சொல்கிறது
தண்ணீர் ஊற்றித் தணிக்க..
கால்கள் வலிக்க
அங்கும் இங்கும் ஓடுகிறேன்
கண்ணீர் மட்டுமே மிஞ்சியது...

காரணம் அறிந்து கொண்டேன்!
கால் போன போக்கிலே
இலக்கில்லாமல் வந்ததால்
இலகுவாய் வந்த வினையுது

மனம் போன போக்கிலே
வேகமாய் ஓடினாலும்
கஷ்டம் என்பது
கூடவே கலந்து நடந்தாலும்
மனம் நாடிய இடம்
வந்து தொலைத்திருக்கும்
அதில் ஒரு வெற்றி!
ஓழிந்திருந்திருக்கும்....

கவிதை! அல்லது வாழ்க்கை!

எல்லைக் கோடுகளில்லாத
விரிந்து பரந்த தேசம்
விதியென்றில்லாமல்
வகுப்பதெல்லாம் நீதி

பார்வையாளர்கள்
பற்றிய அக்கரையில்லாத
பயமறியா மனது

பல சமயம்
தென்றலாய் வருடும்
சில சமயம் தீயாய்ச் சுடும்
மின்னல்களும், இடிகளும்
மழைகளும், மந்தாரங்களும்
சகஜாமாய் மாறி மாறி வரும்
ஒரு மாய பூமி....

வெட்ட வெளிச்சமாக்கும்
தன்னை வெட்டினாலும்
தளராத மனதுடன்
முற்றமும் சுற்றமும் சொல்லி
சமூகம் காக்கும்

அழகான பூக்களை
ரசிக்கும் மனது
அடுத்த நிமிடம்
ரோஜா முட்களை
காரணம் காட்டி
பூக்களின் உலகமே
குருதிகொட்ட வைப்பதாய்
கொடுமை நடை பழகும்.

நேரங்களை காவு கேட்டும்
சுற்றியிருக்கும் சுகந்தம் மறக்கும்
நாற்றமெடுக்கும் நகரத்தில்
நான் தான் ராஜா என்று
முடிசூட்டிக் கொள்ளும்

வசந்தத்தின் வாரிசோ!
என பார்ப்பவரை
பல சமயம் பரவசமூட்டும்
சில சமயம் சிறகொடிந்த
சின்னக் கிளியாய்
தோள்கள் தேடும்.

கண்ணீரில் கரையும்
தண்ணீருக்கே நிரந்தர
நிறம் கொடுக்கும்
பன்னீரில் பாசமாய் கொஞ்சும்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் பேசும்
தீ க்கும் தண்ணீருக்கும்
திருமணம் நடத்தும்

பொய்களின் குரூரத்தில்
மென்மைகள் மலரும்
உண்மைகளின் சாந்தத்தில்
குரூரம் கொப்பளிக்கும்.

சடுகுடு வீதிகளில்
சரளமாய் வேகமெடுக்கும்
நேரான பாதைகளில்
நொண்டி நடக்கும்

இறந்த காலங்களை
நிகழ்காலங்களாக்கி
அலுக்காமல் அசைபோடும்
மாயமுண்ண்டு கவிதைக்கு..

புதிர் போட்டவனுக்கே
தெரியாத விடைகளை
தெரிந்து வைத்திருப்பான்
புரியாத புதிரான பார்வையாளன்..

தெரிவது போல் எழுதினால்
தெரியாதவன் என சொல்லும்
புரியாதவன் போல் பேசினால்
அவன் தான் கவிஞன்
என மெல்லும்.......

தீண்டத்தகாதவன் என
தீண்டியே சொன்னாலும்
எழுது கோல்கள் மட்டும்
”தீட்டு” என்பது எனக்கில்லை என
கண்டும் காணாதது போல்...
கண்டதை பிரசவிக்க
தலை குனியும்

அது தலை நிமிரும் போது
புதிதாய்ப் பிரசவித்த
கவிதை மழலை ஓன்று
தன் பொக்கை வாய் சிரிப்பில்
பரவசமூட்டும்….!!!

Sunday, October 14, 2012

வெளிச்சப் பூக்கள்….!!

சற்று முன்பு
கரண்டு வந்த போது

அவசரமாய் அணைக்கப்பட்ட
மெழுவர்த்திகள் தேடி
தத்தளித்துத் தட்டுத்தடுமாறி
பார்வையில்லாவதன் போல்
பரிதவித்து தீப்பட்டிகள் தேடி
தீக்குச்சுகள் பற்ற வைக்கும் போது
பார்வை வந்தது போல்
வந்து தொலைத்து கரண்டு...

எதற்க்கு வந்தாய் என
எக்காளமிட்டு கேட்டும் மனது
மாய்ந்து போகிறது நிமிடங்களில்
வெளிச்சப்பூக்களின் சவுந்தர்யத்தில்
மிளிரும் கூட்டப்படாத
அறையின் அழகில்...

எல்லாம்… எல்லாம்
இனி கொஞ்ச நேரம்தான்
இனி கூட்டி மெருகேற்ற
இருட்டில் தொலைந்த
கண்ணாடி கவர் முதல்
கழற்றி வைத்த சிம் கார்ட்வரை
தேடிக் காண்பது
ஒரு மெகா சீரியலின் ”முற்றும்”
போலாகிவிட்டது

தும்மிவிட்டு
தலை நிமிரும் போது
கண்பார்வை போய்விட்டதாய்
கர்ண கொடுரமாய்
பயப்பட்டு நிக்கும் போது
மனது நிதானிக்கிறது
கரண்டு போய்விட்டது என்று...

தொலைந்து போனவன்
திடிரென வந்துவிட்டான்
பூச்சூடி புத்தாடை உடுத்து
புன்னகை கொள்ள முடியாமல்
இனி எப்ப தொலைவானோ என்று
தொங்கும் பயத்தில்
இருண்டு கிடக்கிறது முகம்

காற்றுப்புக முடியாத
இறுக்கங்களில் தூங்கவும்
வறுத்தரைக்காமல்
கறிகள் வைக்கவும்
தண்ணீர் நிரப்பப்படாத
டேங்களில் குளிக்கவும்
கசங்கிய துணியுடன்
அலுவலகம் செல்லவும்
டிவி சீரியல்கள் இல்லாமல்
அழுது புலம்பவும்
இருட்டில் சமைக்கவும்
கும்மிருட்டில் சாப்பிடவும்
கற்றுக் கொண்டோம்.


நிரந்த இருளில் இனி
என் நாடு என்பது எனக்கு
புதிய சொல்லல்ல…!!!
அது பழகிப்போன
பாலடைச் சட்டிமாதிரி

பார்வையிழந்தவன் போல்
பார்க்கப் பழகியாகிவிட்டது - இனி
கண்ணாடிகள் வேண்டாம்
தூரப் பார்வைக்கும்
கிட்டப் பார்வைக்கும்


அரசாங்கம் கண்ணையும்
பறிக்காமல் இருப்பதற்க்காக
இறைவனுக்கு நன்றி
சொல்லிவிட்டு…

மிதமுள்ள வாழ்க்கையை
வியர்வை நாற்றங்களிலும்
வியர்ப்பு முட்டல்களிலும்தான்
சல்லாபமும், சங்கடங்களும் - என்று
இருட்டில் வாழ்ந்து தொலைப்போம்.

Wednesday, July 25, 2012

புனிதம் பெற்ற புண்ணிய மாதம்...


பாலை வனத்தில்
பசுமை வயல் போல்...
சுடும் மணலில்
பனித் துளிபோல்..
பார் போற்றும்
பண்பின் வேந்தர்க்கு

மாந்தர் குலத்தை
சொர்க்கம் சேர்க்க
மெய்யான் அல்லாஹ்
!
அருள்மறை தந்தான்
ஜிப்ரீல் வழியாய்
மாநபி பட்டமும்
கூடவே சார்த்தி
….

தேர்வு செய்தான்
வல்லான் அல்லாஹ்
!
ரமலான் மாதம்
பிந்திய பத்தில்
ஒற்றைப்படையில்
ஒரு நாள் அதுவை
...
ஒரிறை பெயரில்
ஒதுக என்றார் ஜிப்ரில் வந்து

ஹீராக் குகையில்
வாசம் செய்த
உம்மியின் சொந்தம்
பண்பின் சிகரம்
ஒதுதல் என்பது
எப்படி சாத்தியம் என்றார்
அறிந்தவன் அல்லாஹ்
!
அதைக் கற்றே கொடுத்தான்.

குளிரில் நடுங்கிய
குலக்கொழுந்து
...
போர்த்தச் சொல்லி
குரலெழுப்ப
அவரில் பாதி
...
போர்த்திய பொழுதில்
பொங்கி வந்தது
அருள்மறை வாக்கு
இக்ரஹ்

ஹக்கவன் அல்லாஹ்
!
தொடர்ந்தான்தந்தான்...
வஹியாய் வந்தது திருமறை...
புனிதம் பெற்றது
புண்ணியமாதம்
அது
...
இறையச்ச தேர்வுக்கு
இறைவன் தேர்வு செய்த
ரமலான் மாதம்
...

 

மறந்து போகாத ரமழான் காலங்கள்..


கப்பல் வரும் முன் காகிதம் வரும்
வாப்பா! வரும்!
நோன்புப் பெருநாளுக்கு
ஹஜ்ஜிப்பெருநாள் கழிந்துதான்
பயணம்

சீங்கப்பூர் சாமானின் மணம்
அரேபிய பெட்டிகளில் இல்லை.. 
தகர டப்பாவில மூன்று அறைகளில்
பெரிசுமுதல் சிறிசுவரை 
அல்மொண்ட் சாக்லெட்டுகள்
அதன் சுவையை என் பிள்ளைகள்
அரேபிய சாக்லெட்டுகளில் இன்னும்
அனுபவித்ததில்லை...

டப்பாவின் மூடியில்
அச்சடித்த படங்களில் மட்டுமே 
பார்த்த அல்மோண்ட
பரிச்சயமாயிற்று பின்னாளில்
கல்ப் கடைகளில்…

ரெடிமேட் அறிமுகமாகாத காலமது
பிட் பிட்டாய் பழபழக்கும் துணிகள்..
வலியஅண்ணன் முதல் நான் வரை
அடிக்கக் கொடுக்கும் கடை
டவரின் கீழ்பாகம்
அன்று கோட்டு தைக்கத்தெரிந்த ஒரே டெய்லர்
செவிடன் செய்மகண்ணு….
ஒரு முறைகூட அலையவிடாமல்
அடிக்கக் கொடுத்தை தந்ததில்லை..
ஆனாலும் அவரிடமே அடிக்கக் கொடுக்கும்
அந்த ரகசியம் இன்னும் பிடிபடாத அதிசயம்

அத்தாளம் முடிந்து
நண்பர்கள் குழுமம் 
நடுக்கடை டீ கடையில்
புட்டும் பயறும் டீயும் குடிக்கும்...
யார்! பணம் கொடுத்தார்?
ஞாபகமில்லை…
நான் ஒரு நாளும் கொடுத்ததில்லை
வீட்டில் வக்கணையாய் 
உண்டாலும் இன்னும் வேண்டும் 
என்றால் ஆம்! சொல்லும் வயிறு
அன்றைய வயிறு….

மாலையில் துவங்கி மஹ்ரிப் வரை
சிறுவர்முதல் பெரியவர்வரை
மகிழ்ந்து விளையாடும்
நெரிசல் குளங்கள்….

மஹ்ரிபுக்கு மட்டும்
கதவு பக்கம் நின்று தொழ
அடம்பிடிக்கும் நண்பர்களும் நானும்
தொழுகை முடிந்ததும்
முதல் ஆளாய் ஓடிப்போய்
அதிகம் கிழங்கிருக்கும் 
கஞ்சிச் சட்டிக்கு அடி போட...

தராவிஹ் தொழுகை நடக்க...
கபடி விளையாடும் கூட்டம்
அவ்வப்போது
தொழுகை இடைவேளைகளில்
ஓடிவந்து ஒச்சை வைத்து விரட்டும்
ஊர் பெரிதுகள்…
ஒரு நிமிட ஒதுங்கல்களூக்கு பின்
மீண்டும் தொடரும் கபடி..

தரவிஹ் தொழுகைக்கு பின் கிடைக்கும் 
இன்று நின்று போன..
சுக்கு காப்பியும் முறுக்கும்.
அப்போது...
அதிகம் சண்டைகளும், தர்கங்களும் 
நடக்கும் அந்த ஹவ்து கரையின் இரவுகள்...

சுப்ஹீ தொழுதுவிட்டு
பள்ளியில் தூங்கினால்
வரும் பயங்கர கனவுகள்…
பள்ளிக் கூடம் இல்லா நாட்களில்
ளுஹர் வரை கதை பேசும்
பள்ளித்திண்ணை..

பெருநாள் இரவுகளில்
கடைசி பஸ்ஸில் வரும்
நண்பர்கள் முதல் விடுமுறையில்
ஹாஸ்டல் விட்டு வீடுவந்த நண்பர்கள் வரை
அப்ஸரா ஸலூனில்
கூட்டம் போட்டு கதை சொல்லும்…

பெருநாள் வந்து விட்டதை
உறுதி செய்யிம் 
நாகூர் அனிபா பாட்டுகளுடன்
வாடகை டியூப் லைட் கட்டும்
இறச்சிக் கடை.

சங்கு மார்க் லுங்கிகள்
இல்லாமல் பெருநாள் காலைகளில்லை
இண்டிமெட்டும், சார்லியும்
பள்ளியின் பேஃன் காற்றில்
மூச்சு முட்டும்…
(இண்டிமெட்டுக்கு சவுதியில் தடை)

தக்பீர் முழக்கம் கேட்கும் வரை
ஓயாத குளக்கரை கூட்டங்கள்…
நிராழியில் கடைசியாய் குளிக்கும்
காக்கா வரும் வரை தொடரும் தக்பீர்..

தொடர்கிறது நினைவுகள்…
பெருளாதாரம் தேடி சிதறிப்போன
என் நண்பர்கள்! பலரின் அன்றைய முகவரி
மறந்து போகவில்லை….
ஆனால் தொலைந்து போனது அவர்களின்
இன்றைய முகவரி.

குடி கலாச்சாரம்..


தடம் புரண்ட பாதைகள்..
அதை சரி வைக்கும்
பாத சாரிகள்..

முன்னேயும் 
பின்னேயும் 
மறந்து
குட்டையில் 
விழுந்து எழும்
குடி கலச்சாரம்
கொள்கை என்று
ஆனபிறகு....

வாந்தியை நக்கும் நாய்
தன் வாயையும்
நக்கில் செல்கிறது
என்பதுகூட 
தெரியாமல்
வீழ்ந்து கிடங்கும்
வீணாய்ப் போனவர்கள்...

அது சாக்கடையானலென்ன
சகதிக் கடையானாலென்ன்..
ஓரோ குட்டையில் 
தன்னோடு ஊற...
எருமை மாடுகள்
வேண்டும் என்று
அடம்பிடிக்கும் மனசு

அதுக்குத் தெரியுமா
கற்பூர வாசனை
பளிங்குத் தரையில்
விட்டாலும்
பழகியது 
மண் தரைதான்
அதன் நாட்டமும் 
அதிலேதான்...

இது மேல்தட்டுமனசு
என மேன்மை கொள்ளும்
இன்றைய இளவல்கள்...
முக்காலும் மூழ்கியபின்
இனி தொலைப்பதற்க்கு
வாழ்க்கை என்பதில்லை
என்று முழுதாய்த் தொலைக்கும் முன்
உணர்ந்து எழுங்கள்
மனிதானாய் வாழுங்கள்...

சுமையகற்றும் யாகம்…சுகமான ராகம்!


(Gulf... a Positive Approach)

சுதந்திரமாய் திரிந்தவனாம்
சுகந்தம் பூசி நடந்தவனாம்
நித்திரை நிஜமாய் கொண்டவனாம்
நிதமும் நட்பாய் கலந்தவனாம்

கண்ணாமூச்சி காட்டியது போல்
கடவுச் சீட்டை கையில் எடுத்து
கல்ஃப் கனவோடு
கண்டம் விடுகையில்
காதோரம் கேட்ட குரல்
கணீரென்று ஒலித்தது
இனி நீ கல்ஃப் காரன்…

கல்ஃப் க்கு 
வாக்குப்பட்டது போல்
வக்கணையாய் வந்து
மாட்டிக் கொண்டான்..

மாதம் அனுப்பிய பணம்
பத்தவில்லை என்ற
பத்திரமாய் வரும் வார்த்தைகளில்
பத்திரமாய் இரு என்று பாசமில்லை

வீடு முதல் கார்வரை
கச்சிதமாய் கடந்தாயிற்று
ஆனாலும் மாதம் அளக்கும்
கல்ஃப் மட்டும் கஷ்டம்
ஆகிப்போன அதிசயம்.

அவனுள் கேள்வி ஆயிரம் உண்டு
ஆனாலும் அத்தனைக்கும் 
விடையும் உண்டு, அது
மாட்டேன் என்று அடம்பிக்கும்
மனதுக்கும் நன்றாய் தெரியும்
பாதுகாப்பானது கல்ஃப் என்று...

போய் வரும் விடுமுறைகளில்
வாங்கோழி பிரியானிக்கு
பில் கொடுக்க ரியாலில்
கணக்குப்பார்த்து தயங்கியபோது...
ஊரில் நண்பண் 
இலகுவாய்
கொடுத்த பில்கள் பல..

மாதவாடகைக்கே 
மங்காத்தா விளையாடும்
மச்சினன் மட்டும் 
மாதம் மாதம் 
மனைவி சகிதம் கோடைக்கானல்
செல்லும் மந்திரம் தெரியாமல்
மதி மயங்கிய 
அதிசய விடுமுறைகள்

உனக்குத் தெரியுமா..??
விலையேற்றங்களில் மூழ்கி
முக்காடு போட்டு நடக்கும்
மனிதர்கள் பற்றி...
வட்டிக்கும், கடனுக்கும்
பதில் சொல்லி 
மாய்ந்து போகும் மனிதர்கள் அவர்கள்...

கோடைகானல் போகும் 
நாட்களில் மட்டுமே
கந்து வட்டிக்கும்
கடன் காரனுக்கும்
காரணமில்லாமல் 
கலங்காமலிருக்கிறான்
உன் உறவினன் என்று...

சிலர் மட்டும் விதிவிலக்காய்
நம்பிக்கையும் உழைப்பையும்
மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து
உயர்ந்து நிற்கிறார்கள்...

இன்னும் சிலரோ...
விதியும், அதிர்ஷ்டமும்
கை கோர்த்து அரவணைக்க
ஆனந்தமாய் வாழ்கிறார்கள்..

ஆனால்...
நீ மாதம் அனுப்பும்
பணத்தில் மிச்சம் பிடித்து
உன் பிள்ளைக்கு தோடு வாங்கிய
உன் மனைவியின் தந்திரம்...
உன்னுள் உருகும் அவள்
நீ உருகாமல் இருக்க
மறைமுகமாய் மனதுக்குள்
அடக்கும் எத்தனை
மொளனங்கள் அவளில்…

வா! என்றால் சென்று விடுவாய் நீ..
அறிந்தே வைத்திருக்கிறாள் அவளும்
உன் வருகை அவளையும் உன்னையும்
சந்தோசப் படுத்தும் அது...
உன் செல்ல குழந்தைகளயும்
உன் பொற்றோரையும்...
பட்டினி போடும் வரை..

இட்டிலிக்கு சட்டினி வேண்டும்
என்று அடம் பிடிக்கும்
உன் செல்ல மகனுக்கு
சட்டினிக்கு தேங்காய் வாங்க
கடைக்காரனிடம் கடன் கேட்கும் வரை..

மீன் விலை தாங்காமல்
வாங்காமல் சென்று
வக்கணையாய் உண்ண
நீ உட்காரும் போது
உறைக்கும் உனக்கு…
உன் பெற்றோரின் சுவையறிந்து
ஊட்டமுடியாத ஊனன் நீ என்று….
அதை உறுதி செய்வதாய்
முகத்தை கோணலாக்கும்
உன்னில் பாதியானவள்..

அத்தனையும் அறிந்தே 
வைத்திருக்கிறாள் உன்னவள்..
கடித்து பிடித்து
தனிமை வெயிலில் காய்ந்து
காமம் காத்து், கருத்தை அடக்கி
காத்திருக்கிறாள் அவளும்
உன்னைப் போல்...
காலம் கடக்கும்
கனவுகள் நடக்கும்…
ஆனாலும்...
உனக்கு இல்லை
ஈட்டிக்காரன் வம்பு..
கடன்காரன் தொல்லை..

வசந்தமே! உன்னால்
உன் செல்லக் குழந்தைகளுக்கு
உன் பெற்றோருக்கு...
நீ செய்வது தியாகம்தான்
சுமையகற்றும் யாகம்தான்
அது சுகமான ராகம்தான்!