Sunday, November 27, 2011

கடல் தாண்டி வருவாயா?




ஒரு கடிகாரம் வாங்கவே
ஒரு யுகமாய் யோசிக்கும் நான்
உன்னை பார்த்த வினாடியில்
சரி என்று தலையசைத்தேன்….

பின்பு
உன் தந்தை என் கைபிடித்து
என் மகளை மகர் பெற்று
மணமுடித்து வைக்கிறேன்
சம்மதமா? என்றதற்க்கு
ஒரு ஓ போட்டு சம்மதம் என்றேன்…

இன்று நீ என் மனைவி!
மாதம் ஆறு முடிந்து விட்டது..
பாதிக் கனவில் எழுப்பி
பாஸ் போர்ட்டை கையில் திணித்து
பத்திரமாய் எல்லோரும் என்னை
பயணம் அனுப்பிய போது..
நீ மட்டும் உன் நீர் திரண்ட கண்களோடு
பாவமாய் தனியாய்….

சுடும் பாலையின்
சுட்டெரிக்கும் வெயில்…
உச்சியில் சூரியன்
ஆனாலும் கடும் குளிர்….
அவ்வப்போது வந்து
பயமுறுத்தும் புழுதி புயல்…
எல்லாம் பழகிப்போயிற்று….


ஒடி திரிந்து
வேலை பார்த்து விட்டு
வந்த களைப்பு தீருமுன்
வக்கணையாய் உண்ணும் எனக்கு
சமைக்க நேரம் ஏது?

சம்பளத்தில் ஒரு பகுதி
கேரளா ஹோட்டலில் கொடுத்துவிட்டு
வீணாய்ப்போன பீப் பிரையும், பரோட்டாவும்
தின்று அலுத்து விட்டது….
இன்று
சிக்கன் இல்லாமல் வாழவே முடியாது
என்ற சிக்கலில் நான்.

வெள்ளிக்கிழமைகளில்
வாழ்ந்து..
மற்ற கிழமைகளில்..
சாவதே வாழ்க்கையாகி விட்டது…
போர்வைக்குள் முடங்கும் போதெல்லாம்
தூக்கம் வருவரை
தனிமை தாக்கம் வந்து என்னை சம்மட்டியால் அடிக்கும்.
நான் உறங்கிய இரவுகளை
என்னால் கணக்கிட்டு சொல்லமுடியும்…

இன்று…
கடுமையான காய்ச்சல்
மரித்து விடுவேன் என்று
மனநோய் வந்தவன் போல்
மல்லாந்து படுத்திருக்கிறேன்….

காதகன் மேலாளர்
அவசரமாய் வரச்சொல்லி
ஆள் அனுப்பியிருக்கிறான்….




கூடவே…ஒரு
நல்ல செய்தியும்..

உனக்கு விசா ரெடியாகிவிட்டதாம்
உடனே வந்து பெற்றுக் கொள் என்று…
காய்ச்சல் விட்டது போலிருக்கிறது..
மனதுக்குள் புதிதாய் பூக்கள் பூக்கிறது…

என் கண்மணியே!
நீ கடல் தாண்டி வருவாய்…!!!!
வரப்போகிறாய்!!!

No comments:

Post a Comment