Friday, January 6, 2012

தூக்கம்....

தூக்கம்....
வரும்ம்... ஆனால் வராது!

நீ வராத இரவுகளில்
நான் முழித்திருக்கிறேன்…
காதலிக்காக காத்திருப்பது போல்….

நீ வந்தநாட்களில்
நான் விழித்திருக்கிறேன்
கனவுக் காதலியோடு

தூக்கம் இல்லாத இரவுகள்
கரையில் தூக்கி போட்ட
மீன் குஞ்சு போல்
கல்ஃப் பேச்சுலருக்கு
அவன் உறவை
ஊரில் தொலைத்து விட்டு
உறக்கத்தை
வெளிநாட்டில் தேடுகிறான்.

வசந்தம் வரும் என்று
வாழ்த்தியனுப்பியவர்கள்
வசதி வந்த போது
வரவேண்டாம் என்கிறார்கள்
வருமா தூக்கம்?

பக்கத்து வீட்டில்
பாம் வெடித்தாலும்
பாயிலிருந்து
எழும்பாத நான்
இங்கு
பக்கத்து பெட்டில்
பாய்விரித்தாலே
பாய்ந்து எழுகிறேன்
பாவிப்பயலே
பார்த்து விரிக்கக்கூடாது

என் அலுவலக மேலாளர் முதல்
ஆபீஸ் டீ பாய் வரை
எல்லோரும் கோபப்பட
என்னிடம் காரணமிருக்கும்
இரவில் இழந்த தூக்கம்!!

பைக்கை விற்று
பஸ் ஏறினேன்
இற்று கார் வாங்க
காசிருக்கிறது
எல்லாம் தூக்கம் விற்ற காசு

ஓய்வு நேரத்திலும்
ஓவர் டைம் பார்க்கிறேனாம்
உறக்கம் வராமல்தான்
உண்டாக்க வந்தேன் என்பது
தெரியவா போகிறது
தெனாவெட்டு என்பவர்களுக்கு

சேல்ஸ் ரிட்டேன்னுக்கு
கிரெடிட் நோட் அடிக்கும் நான்..
நான் விற்ற தூக்கத்துக்கு
இன்வாய்ஸ் மட்டுமே அடிக்கிறேன்.
என் கல்லாவில் காசு
ஆனால் கனவில் தூசு…..

பதினொரு மணிக்கு
பத்தாவது முறையாக
டிபன் ரெடி என்று அறைந்து
சொன்னாலும் அசையாமல்
தூங்கிய நான்
இங்கு அலாரம் வைக்காமலேயே
ஐந்து மணிக்கே ஆஜராகிறேன்
ஆறிப்போன காஃபிக்காக.

சுகமாய் உறங்கிய
வீட்டை அடகுவைத்து
விசா வாங்கினேன்
இன்று பங்களா கட்டி
அதில் உறங்க
காத்திருக்கிறேன் கல்ஃபில்…….
தூக்கம் வராமல்.