Wednesday, July 25, 2012

புனிதம் பெற்ற புண்ணிய மாதம்...


பாலை வனத்தில்
பசுமை வயல் போல்...
சுடும் மணலில்
பனித் துளிபோல்..
பார் போற்றும்
பண்பின் வேந்தர்க்கு

மாந்தர் குலத்தை
சொர்க்கம் சேர்க்க
மெய்யான் அல்லாஹ்
!
அருள்மறை தந்தான்
ஜிப்ரீல் வழியாய்
மாநபி பட்டமும்
கூடவே சார்த்தி
….

தேர்வு செய்தான்
வல்லான் அல்லாஹ்
!
ரமலான் மாதம்
பிந்திய பத்தில்
ஒற்றைப்படையில்
ஒரு நாள் அதுவை
...
ஒரிறை பெயரில்
ஒதுக என்றார் ஜிப்ரில் வந்து

ஹீராக் குகையில்
வாசம் செய்த
உம்மியின் சொந்தம்
பண்பின் சிகரம்
ஒதுதல் என்பது
எப்படி சாத்தியம் என்றார்
அறிந்தவன் அல்லாஹ்
!
அதைக் கற்றே கொடுத்தான்.

குளிரில் நடுங்கிய
குலக்கொழுந்து
...
போர்த்தச் சொல்லி
குரலெழுப்ப
அவரில் பாதி
...
போர்த்திய பொழுதில்
பொங்கி வந்தது
அருள்மறை வாக்கு
இக்ரஹ்

ஹக்கவன் அல்லாஹ்
!
தொடர்ந்தான்தந்தான்...
வஹியாய் வந்தது திருமறை...
புனிதம் பெற்றது
புண்ணியமாதம்
அது
...
இறையச்ச தேர்வுக்கு
இறைவன் தேர்வு செய்த
ரமலான் மாதம்
...

 

மறந்து போகாத ரமழான் காலங்கள்..


கப்பல் வரும் முன் காகிதம் வரும்
வாப்பா! வரும்!
நோன்புப் பெருநாளுக்கு
ஹஜ்ஜிப்பெருநாள் கழிந்துதான்
பயணம்

சீங்கப்பூர் சாமானின் மணம்
அரேபிய பெட்டிகளில் இல்லை.. 
தகர டப்பாவில மூன்று அறைகளில்
பெரிசுமுதல் சிறிசுவரை 
அல்மொண்ட் சாக்லெட்டுகள்
அதன் சுவையை என் பிள்ளைகள்
அரேபிய சாக்லெட்டுகளில் இன்னும்
அனுபவித்ததில்லை...

டப்பாவின் மூடியில்
அச்சடித்த படங்களில் மட்டுமே 
பார்த்த அல்மோண்ட
பரிச்சயமாயிற்று பின்னாளில்
கல்ப் கடைகளில்…

ரெடிமேட் அறிமுகமாகாத காலமது
பிட் பிட்டாய் பழபழக்கும் துணிகள்..
வலியஅண்ணன் முதல் நான் வரை
அடிக்கக் கொடுக்கும் கடை
டவரின் கீழ்பாகம்
அன்று கோட்டு தைக்கத்தெரிந்த ஒரே டெய்லர்
செவிடன் செய்மகண்ணு….
ஒரு முறைகூட அலையவிடாமல்
அடிக்கக் கொடுத்தை தந்ததில்லை..
ஆனாலும் அவரிடமே அடிக்கக் கொடுக்கும்
அந்த ரகசியம் இன்னும் பிடிபடாத அதிசயம்

அத்தாளம் முடிந்து
நண்பர்கள் குழுமம் 
நடுக்கடை டீ கடையில்
புட்டும் பயறும் டீயும் குடிக்கும்...
யார்! பணம் கொடுத்தார்?
ஞாபகமில்லை…
நான் ஒரு நாளும் கொடுத்ததில்லை
வீட்டில் வக்கணையாய் 
உண்டாலும் இன்னும் வேண்டும் 
என்றால் ஆம்! சொல்லும் வயிறு
அன்றைய வயிறு….

மாலையில் துவங்கி மஹ்ரிப் வரை
சிறுவர்முதல் பெரியவர்வரை
மகிழ்ந்து விளையாடும்
நெரிசல் குளங்கள்….

மஹ்ரிபுக்கு மட்டும்
கதவு பக்கம் நின்று தொழ
அடம்பிடிக்கும் நண்பர்களும் நானும்
தொழுகை முடிந்ததும்
முதல் ஆளாய் ஓடிப்போய்
அதிகம் கிழங்கிருக்கும் 
கஞ்சிச் சட்டிக்கு அடி போட...

தராவிஹ் தொழுகை நடக்க...
கபடி விளையாடும் கூட்டம்
அவ்வப்போது
தொழுகை இடைவேளைகளில்
ஓடிவந்து ஒச்சை வைத்து விரட்டும்
ஊர் பெரிதுகள்…
ஒரு நிமிட ஒதுங்கல்களூக்கு பின்
மீண்டும் தொடரும் கபடி..

தரவிஹ் தொழுகைக்கு பின் கிடைக்கும் 
இன்று நின்று போன..
சுக்கு காப்பியும் முறுக்கும்.
அப்போது...
அதிகம் சண்டைகளும், தர்கங்களும் 
நடக்கும் அந்த ஹவ்து கரையின் இரவுகள்...

சுப்ஹீ தொழுதுவிட்டு
பள்ளியில் தூங்கினால்
வரும் பயங்கர கனவுகள்…
பள்ளிக் கூடம் இல்லா நாட்களில்
ளுஹர் வரை கதை பேசும்
பள்ளித்திண்ணை..

பெருநாள் இரவுகளில்
கடைசி பஸ்ஸில் வரும்
நண்பர்கள் முதல் விடுமுறையில்
ஹாஸ்டல் விட்டு வீடுவந்த நண்பர்கள் வரை
அப்ஸரா ஸலூனில்
கூட்டம் போட்டு கதை சொல்லும்…

பெருநாள் வந்து விட்டதை
உறுதி செய்யிம் 
நாகூர் அனிபா பாட்டுகளுடன்
வாடகை டியூப் லைட் கட்டும்
இறச்சிக் கடை.

சங்கு மார்க் லுங்கிகள்
இல்லாமல் பெருநாள் காலைகளில்லை
இண்டிமெட்டும், சார்லியும்
பள்ளியின் பேஃன் காற்றில்
மூச்சு முட்டும்…
(இண்டிமெட்டுக்கு சவுதியில் தடை)

தக்பீர் முழக்கம் கேட்கும் வரை
ஓயாத குளக்கரை கூட்டங்கள்…
நிராழியில் கடைசியாய் குளிக்கும்
காக்கா வரும் வரை தொடரும் தக்பீர்..

தொடர்கிறது நினைவுகள்…
பெருளாதாரம் தேடி சிதறிப்போன
என் நண்பர்கள்! பலரின் அன்றைய முகவரி
மறந்து போகவில்லை….
ஆனால் தொலைந்து போனது அவர்களின்
இன்றைய முகவரி.

குடி கலாச்சாரம்..


தடம் புரண்ட பாதைகள்..
அதை சரி வைக்கும்
பாத சாரிகள்..

முன்னேயும் 
பின்னேயும் 
மறந்து
குட்டையில் 
விழுந்து எழும்
குடி கலச்சாரம்
கொள்கை என்று
ஆனபிறகு....

வாந்தியை நக்கும் நாய்
தன் வாயையும்
நக்கில் செல்கிறது
என்பதுகூட 
தெரியாமல்
வீழ்ந்து கிடங்கும்
வீணாய்ப் போனவர்கள்...

அது சாக்கடையானலென்ன
சகதிக் கடையானாலென்ன்..
ஓரோ குட்டையில் 
தன்னோடு ஊற...
எருமை மாடுகள்
வேண்டும் என்று
அடம்பிடிக்கும் மனசு

அதுக்குத் தெரியுமா
கற்பூர வாசனை
பளிங்குத் தரையில்
விட்டாலும்
பழகியது 
மண் தரைதான்
அதன் நாட்டமும் 
அதிலேதான்...

இது மேல்தட்டுமனசு
என மேன்மை கொள்ளும்
இன்றைய இளவல்கள்...
முக்காலும் மூழ்கியபின்
இனி தொலைப்பதற்க்கு
வாழ்க்கை என்பதில்லை
என்று முழுதாய்த் தொலைக்கும் முன்
உணர்ந்து எழுங்கள்
மனிதானாய் வாழுங்கள்...

சுமையகற்றும் யாகம்…சுகமான ராகம்!


(Gulf... a Positive Approach)

சுதந்திரமாய் திரிந்தவனாம்
சுகந்தம் பூசி நடந்தவனாம்
நித்திரை நிஜமாய் கொண்டவனாம்
நிதமும் நட்பாய் கலந்தவனாம்

கண்ணாமூச்சி காட்டியது போல்
கடவுச் சீட்டை கையில் எடுத்து
கல்ஃப் கனவோடு
கண்டம் விடுகையில்
காதோரம் கேட்ட குரல்
கணீரென்று ஒலித்தது
இனி நீ கல்ஃப் காரன்…

கல்ஃப் க்கு 
வாக்குப்பட்டது போல்
வக்கணையாய் வந்து
மாட்டிக் கொண்டான்..

மாதம் அனுப்பிய பணம்
பத்தவில்லை என்ற
பத்திரமாய் வரும் வார்த்தைகளில்
பத்திரமாய் இரு என்று பாசமில்லை

வீடு முதல் கார்வரை
கச்சிதமாய் கடந்தாயிற்று
ஆனாலும் மாதம் அளக்கும்
கல்ஃப் மட்டும் கஷ்டம்
ஆகிப்போன அதிசயம்.

அவனுள் கேள்வி ஆயிரம் உண்டு
ஆனாலும் அத்தனைக்கும் 
விடையும் உண்டு, அது
மாட்டேன் என்று அடம்பிக்கும்
மனதுக்கும் நன்றாய் தெரியும்
பாதுகாப்பானது கல்ஃப் என்று...

போய் வரும் விடுமுறைகளில்
வாங்கோழி பிரியானிக்கு
பில் கொடுக்க ரியாலில்
கணக்குப்பார்த்து தயங்கியபோது...
ஊரில் நண்பண் 
இலகுவாய்
கொடுத்த பில்கள் பல..

மாதவாடகைக்கே 
மங்காத்தா விளையாடும்
மச்சினன் மட்டும் 
மாதம் மாதம் 
மனைவி சகிதம் கோடைக்கானல்
செல்லும் மந்திரம் தெரியாமல்
மதி மயங்கிய 
அதிசய விடுமுறைகள்

உனக்குத் தெரியுமா..??
விலையேற்றங்களில் மூழ்கி
முக்காடு போட்டு நடக்கும்
மனிதர்கள் பற்றி...
வட்டிக்கும், கடனுக்கும்
பதில் சொல்லி 
மாய்ந்து போகும் மனிதர்கள் அவர்கள்...

கோடைகானல் போகும் 
நாட்களில் மட்டுமே
கந்து வட்டிக்கும்
கடன் காரனுக்கும்
காரணமில்லாமல் 
கலங்காமலிருக்கிறான்
உன் உறவினன் என்று...

சிலர் மட்டும் விதிவிலக்காய்
நம்பிக்கையும் உழைப்பையும்
மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து
உயர்ந்து நிற்கிறார்கள்...

இன்னும் சிலரோ...
விதியும், அதிர்ஷ்டமும்
கை கோர்த்து அரவணைக்க
ஆனந்தமாய் வாழ்கிறார்கள்..

ஆனால்...
நீ மாதம் அனுப்பும்
பணத்தில் மிச்சம் பிடித்து
உன் பிள்ளைக்கு தோடு வாங்கிய
உன் மனைவியின் தந்திரம்...
உன்னுள் உருகும் அவள்
நீ உருகாமல் இருக்க
மறைமுகமாய் மனதுக்குள்
அடக்கும் எத்தனை
மொளனங்கள் அவளில்…

வா! என்றால் சென்று விடுவாய் நீ..
அறிந்தே வைத்திருக்கிறாள் அவளும்
உன் வருகை அவளையும் உன்னையும்
சந்தோசப் படுத்தும் அது...
உன் செல்ல குழந்தைகளயும்
உன் பொற்றோரையும்...
பட்டினி போடும் வரை..

இட்டிலிக்கு சட்டினி வேண்டும்
என்று அடம் பிடிக்கும்
உன் செல்ல மகனுக்கு
சட்டினிக்கு தேங்காய் வாங்க
கடைக்காரனிடம் கடன் கேட்கும் வரை..

மீன் விலை தாங்காமல்
வாங்காமல் சென்று
வக்கணையாய் உண்ண
நீ உட்காரும் போது
உறைக்கும் உனக்கு…
உன் பெற்றோரின் சுவையறிந்து
ஊட்டமுடியாத ஊனன் நீ என்று….
அதை உறுதி செய்வதாய்
முகத்தை கோணலாக்கும்
உன்னில் பாதியானவள்..

அத்தனையும் அறிந்தே 
வைத்திருக்கிறாள் உன்னவள்..
கடித்து பிடித்து
தனிமை வெயிலில் காய்ந்து
காமம் காத்து், கருத்தை அடக்கி
காத்திருக்கிறாள் அவளும்
உன்னைப் போல்...
காலம் கடக்கும்
கனவுகள் நடக்கும்…
ஆனாலும்...
உனக்கு இல்லை
ஈட்டிக்காரன் வம்பு..
கடன்காரன் தொல்லை..

வசந்தமே! உன்னால்
உன் செல்லக் குழந்தைகளுக்கு
உன் பெற்றோருக்கு...
நீ செய்வது தியாகம்தான்
சுமையகற்றும் யாகம்தான்
அது சுகமான ராகம்தான்!

மனிதம்...


தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால்
உற்றாருக்கும்
உறவுக்கும் கவலையில்லை

ஜெகத்தினை அழித்திடுவேன்
என்றவனின் கல்லறை 
காடுபிடித்து காணமல் போய் விட்டது

மனிதாபிமானமுள்ள மனிதம் 
வெட்கித்தலை குனிய மறுத்து
கண்டதை காணவில்லை என்று
மனசாட்சி மறக்கிறது

பூனை தூங்கும்
அண்டை வீட்டின் 
அடுப்படி மறந்து
ஆடம்பரமாய் விருந்து வைத்த
அனுபவம் சொல்கிறான் 
பக்கத்து வீட்டு பசியாளியுடம்

இங்கே!
மனிதம் மதித்து
பாதங்களுக்கு
தன் செருப்பை வழங்கும்
பாரின்காரர்... 

மனிதன் இன்னும்
வாழ்கிறான் என்று
ஆனந்த அழுகையில்
என் தேசத்து
ஏழை…

இனி 
என்ன பெருமையடா உனக்கு 
உலக பணக்காரர்களில் சிலர்
என் நாட்டில் உண்டு என்று….