Saturday, January 12, 2013

எரியும் ரோஜாக்கள்

தன் வீட்டு ரோஜா செடிகளுக்கு
தண்ணீர் ஊற்ற பொட்ரோல் தேசத்து
எண்ணெய்கிணறுகளில்
எரியும் ரோஜாக்கள்

கண்ணீரோடு தண்ணீர் தேடி
விமானம் ஏறும் முன்பு
பலரும் முயற்ச்சிப்பதில்லை
தன் தோட்டத்தில்
தானே ஒரு கிணறு தோண்ட...

ஞாயிற்றுக் கிழமை மட்டன் கறி
வெள்ளிக் கிழமை பிரியாணி
விக்கலில்லாம் முழுங்கும் போது
யாரும் நினைப்பதில்லை
தன் வீட்டு குடிமகனின்
குடி கெட்டுக்கொண்டிருப்பதை

சாப்பிடும் சமயத்து நினைவுப்பிறழலில்
சிறுமூளைக்கும் பெரும் மூளைக்குமான
சண்டை சச்சரவில் மூட மறந்த
உள் நாட்டு சங்கதியின்
புரையேற்றங்களில்
மனைவி நினைப்பதாய்
மகிழும் போது…
புது சாரியின் பார்டருக்கு
மேட்சாய் சட்டைத்துணியில்லை...
கவலைப்படும் மனைவி!

வரதட்சணை விரும்பிகளுக்கு
தங்கையை தாரை வார்ததபோது
அவள் கழுத்தில் தொங்குகிறது
மொழுவர்த்தி வெளிச்சத்தில்
உருக்கிய தங்கம்

புதிதாய் கட்டிய வீட்டில்
பால் காய்ச்சும் நெருப்பில்
இளமைகளும்
எரிந்துகொண்டிருக்கிறது

உற்றாரும் உறவினரும்
உயிரோடிந்தாலும்
லேசான தலைவலிக்கும்
கடுமையான காய்ச்சலுக்கும்
ரூம்மெட்தான்….
அம்மையும் அப்பனும்
மனைவியும் பிள்ளைகளும்

கடைசி நேரத்தில் எழுந்து
கண்டதை அணிந்து
கால்கடுக்க ஓடும் போது மனதில்..
வெள்ளை வேட்டியும்
சலவைச் சட்டையும்
பூரூட் மணமுமாய்
களித்திருந்த
வெள்ளிக் கிழமை ஜீம்மாக்கள்

உறக்கம் வராத இரவுகளில்
ஆசையாய் அணைத்துக் கொள்ள
இன்னுமொரு தலையணைகூட இல்லை
ஊருக்குப் போகும் போது
காலுக்கு என்று தேடித்தேடி
வாங்கிய டிசைன் போட்ட
தலையணைகள்

பால் வார்க்க பாலையில் யாருமில்லை
விம்மலும் முனங்கல்களோடும்
முடிந்து போகிறது அன்றைய தினங்கள்

மொழுகுவர்த்திகள் ஏற்றுமதி நின்றபடில்லை
ஏர் போர்ட் போக ரெடியாகும் தோழன்
தன் வீட்டு ரோஜா செடிகளுக்கு தண்ணீர் உற்ற
வேனல் அடுப்புகளுக்கு விறகு ஆக...
இன்றைய விமானத்தில்
முதுமையில் திரும்பிச் செல்ல
இளைமையில் வருகிறது ஒரு புதிய ரோஜா!

கண்ணீரோடு தண்ணீர் தேடி
விமானம் ஏறும் முன்பு
பலரும் முயற்ச்சிப்பதில்லை
தன் தோட்டத்தில்
தானே ஒரு கிணறு தோண்ட…

No comments:

Post a Comment