Saturday, January 12, 2013

இந்த பஸ் எங்க போவு...?


மல்லிகை பூவும், மரிக்கொழுந்து வாசமும் மணமணக்கும் நாகர்கோவில் நேசமணி பஸ் நிற்க்கும் அண்ணா பஸ் நிலையத்தின் மாலைப் பொழுது.

7D பள்ளியாடி பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த பெஞ்சில் ஒரு பாட்டி, வெத்திலை மென்று சுவரெங்கும் துப்பும் ரகம். ஒவ்வோரு பஸ் வந்து அந்த பகுதியில் நிறுத்தும் போதும். பக்கத்தில் போவோரிடம்

“இந்த பஸ் எங்க போவு? “ என்று கேட்டுக் கொள்வார்.

என்னிடமும் இரண்டு மூன்று முறை கேட்டாகிவிட்டது, நானும் அலுக்காமல் “பூதப்பாண்டி, திங்கட் சந்தை, குளச்சல் என்று சொல்லி அலுத்து விட்டேன், நான் அலுத்து போனதை முகத்திலும் காட்ட பாட்டி என்னிடம் கேட்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்

வழக்கம் போல் நான் காத்து நிற்க்கும் பஸ் தாமதமாக வந்து அடித்து முடித்து ஏற முற்பட்டோர் எல்லோரிடமும். பஸ் கொஞ்சம் தாமதாமாகத்தன் போகும் என்று கண்டக்டர் சொல்ல, காத்திருந்தவர்கள் மீண்டும் காத்திருக்க, கூட்ட நெரிசலில் முந்தியடிப்பவர் வேகத்தை குறைந்துக் கொண்டார்கள்.

எனக்கும் நண்பர்களுக்கும் பஸ் புறப்படும் நேரம் மட்டும் ஒரு இரண்டு ஸ்டெப் ஓடி போய் ஏறும் பழக்கம், அப்படி ஏறாமல் நேரமே இடம் பிடித்து உள்ளே போய் உட்கார்ந்திருந்தால் என் இளமைக்கான யோக்கியதை குறைந்து விடும் என எண்ணியதே அதற்க்கு காரணம்.

எனவே, நேரத்தை போக்க வேடிக்கை பார்ப்பது போல்….
காலையில் வைத்த ரோஜா வும் மல்லிகையும் பிச்சியும் கசங்கி அதன் மணம் அத்தனையும் கல்லூரியின் வகுப்பறைகளாலும், வராந்தாக்களாலும், நுகரப்பட்டதால் கதம்ப மணமிழந்து வாடித் தொங்கும் கூந்தல்களுக்கு சொந்தக்காரிகளான என் சக மங்கையர்கரசிகள் உலாத்திக் கொண்டும் உட்கார்ந்து கொண்டுமிருந்தார்கள்.

அவர்களில் பலர் என்னை ஏறெடுத்தும் பார்ககவில்லை என்றாலும் நான் பராபட்சமின்றி அவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னுடன் வேலைப் பார்க்கும் சில முகங்கழும், அதில் உண்டு என்பதால் கொஞ்சம் அடக்கியிம் வாசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் உண்மையாக இருந்திருக்க வேண்டும்.

என்றாலும் அவ்வப்போது பக்கத்து பாட்டியையும் ஒரு கண் பார்க்கத்தவறுவதில்லை, காரணம், பாட்டிக்கான பஸ் வந்ததா என்ற அக்கரையே..!

எல்லா பஸ்ஸும் வருவதும் போவதுமாக இருக்க பாட்டியின் ஊருக்கு போகும் பஸ் வேறு பகுதியில் நிற்க்குமோ! என்று எனக்குள் எழுந்த சந்தேகத்தால் பாட்டியிடம் சென்று உங்களுக்கு எங்க போகணும் என்றேன்…

பாட்டி போட்ட போடு, என்னை தூக்கி வாரிப் போட்டது…

பாட்டி அமைதியாக சொன்னாள் மக்கா… எனக்கு வடசேரி போகணும் என்று.

நான் சொன்னேன் இங்கு வந்து சென்ற எல்லா பஸ்ஸூம் “வடசேரி” போய்த்தானே போகும் என்று, பாட்டியோ…

பாழாய்ப் போனவனே உங்கிட்டயும் எத்தனை தடவை கேட்டேன்.

”இந்த பஸ்ஸு வடசேரி போகும்ன்னு” நீ சொல்லவேயில்லையே?

பாட்டியிடம் நான் கேட்டேன்

“வடசேரி” தான் போகனும்னு நீங்களும் சொல்லவேயில்லையே…!!!

சற்றும் நேரம் மொனமாக இருந்த பாட்டி தன் தவறை புரிந்திருக்க வேண்டும்… நான் போக வேண்டிய பஸ்ஸைக் காட்டி

இது ”வடசேரி” போகுமா என்று இந்த முறை சரியாகக் கேட்டார்..!!!

No comments:

Post a Comment