Wednesday, July 25, 2012

சுமையகற்றும் யாகம்…சுகமான ராகம்!


(Gulf... a Positive Approach)

சுதந்திரமாய் திரிந்தவனாம்
சுகந்தம் பூசி நடந்தவனாம்
நித்திரை நிஜமாய் கொண்டவனாம்
நிதமும் நட்பாய் கலந்தவனாம்

கண்ணாமூச்சி காட்டியது போல்
கடவுச் சீட்டை கையில் எடுத்து
கல்ஃப் கனவோடு
கண்டம் விடுகையில்
காதோரம் கேட்ட குரல்
கணீரென்று ஒலித்தது
இனி நீ கல்ஃப் காரன்…

கல்ஃப் க்கு 
வாக்குப்பட்டது போல்
வக்கணையாய் வந்து
மாட்டிக் கொண்டான்..

மாதம் அனுப்பிய பணம்
பத்தவில்லை என்ற
பத்திரமாய் வரும் வார்த்தைகளில்
பத்திரமாய் இரு என்று பாசமில்லை

வீடு முதல் கார்வரை
கச்சிதமாய் கடந்தாயிற்று
ஆனாலும் மாதம் அளக்கும்
கல்ஃப் மட்டும் கஷ்டம்
ஆகிப்போன அதிசயம்.

அவனுள் கேள்வி ஆயிரம் உண்டு
ஆனாலும் அத்தனைக்கும் 
விடையும் உண்டு, அது
மாட்டேன் என்று அடம்பிக்கும்
மனதுக்கும் நன்றாய் தெரியும்
பாதுகாப்பானது கல்ஃப் என்று...

போய் வரும் விடுமுறைகளில்
வாங்கோழி பிரியானிக்கு
பில் கொடுக்க ரியாலில்
கணக்குப்பார்த்து தயங்கியபோது...
ஊரில் நண்பண் 
இலகுவாய்
கொடுத்த பில்கள் பல..

மாதவாடகைக்கே 
மங்காத்தா விளையாடும்
மச்சினன் மட்டும் 
மாதம் மாதம் 
மனைவி சகிதம் கோடைக்கானல்
செல்லும் மந்திரம் தெரியாமல்
மதி மயங்கிய 
அதிசய விடுமுறைகள்

உனக்குத் தெரியுமா..??
விலையேற்றங்களில் மூழ்கி
முக்காடு போட்டு நடக்கும்
மனிதர்கள் பற்றி...
வட்டிக்கும், கடனுக்கும்
பதில் சொல்லி 
மாய்ந்து போகும் மனிதர்கள் அவர்கள்...

கோடைகானல் போகும் 
நாட்களில் மட்டுமே
கந்து வட்டிக்கும்
கடன் காரனுக்கும்
காரணமில்லாமல் 
கலங்காமலிருக்கிறான்
உன் உறவினன் என்று...

சிலர் மட்டும் விதிவிலக்காய்
நம்பிக்கையும் உழைப்பையும்
மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து
உயர்ந்து நிற்கிறார்கள்...

இன்னும் சிலரோ...
விதியும், அதிர்ஷ்டமும்
கை கோர்த்து அரவணைக்க
ஆனந்தமாய் வாழ்கிறார்கள்..

ஆனால்...
நீ மாதம் அனுப்பும்
பணத்தில் மிச்சம் பிடித்து
உன் பிள்ளைக்கு தோடு வாங்கிய
உன் மனைவியின் தந்திரம்...
உன்னுள் உருகும் அவள்
நீ உருகாமல் இருக்க
மறைமுகமாய் மனதுக்குள்
அடக்கும் எத்தனை
மொளனங்கள் அவளில்…

வா! என்றால் சென்று விடுவாய் நீ..
அறிந்தே வைத்திருக்கிறாள் அவளும்
உன் வருகை அவளையும் உன்னையும்
சந்தோசப் படுத்தும் அது...
உன் செல்ல குழந்தைகளயும்
உன் பொற்றோரையும்...
பட்டினி போடும் வரை..

இட்டிலிக்கு சட்டினி வேண்டும்
என்று அடம் பிடிக்கும்
உன் செல்ல மகனுக்கு
சட்டினிக்கு தேங்காய் வாங்க
கடைக்காரனிடம் கடன் கேட்கும் வரை..

மீன் விலை தாங்காமல்
வாங்காமல் சென்று
வக்கணையாய் உண்ண
நீ உட்காரும் போது
உறைக்கும் உனக்கு…
உன் பெற்றோரின் சுவையறிந்து
ஊட்டமுடியாத ஊனன் நீ என்று….
அதை உறுதி செய்வதாய்
முகத்தை கோணலாக்கும்
உன்னில் பாதியானவள்..

அத்தனையும் அறிந்தே 
வைத்திருக்கிறாள் உன்னவள்..
கடித்து பிடித்து
தனிமை வெயிலில் காய்ந்து
காமம் காத்து், கருத்தை அடக்கி
காத்திருக்கிறாள் அவளும்
உன்னைப் போல்...
காலம் கடக்கும்
கனவுகள் நடக்கும்…
ஆனாலும்...
உனக்கு இல்லை
ஈட்டிக்காரன் வம்பு..
கடன்காரன் தொல்லை..

வசந்தமே! உன்னால்
உன் செல்லக் குழந்தைகளுக்கு
உன் பெற்றோருக்கு...
நீ செய்வது தியாகம்தான்
சுமையகற்றும் யாகம்தான்
அது சுகமான ராகம்தான்!

No comments:

Post a Comment