Wednesday, July 25, 2012

மறந்து போகாத ரமழான் காலங்கள்..


கப்பல் வரும் முன் காகிதம் வரும்
வாப்பா! வரும்!
நோன்புப் பெருநாளுக்கு
ஹஜ்ஜிப்பெருநாள் கழிந்துதான்
பயணம்

சீங்கப்பூர் சாமானின் மணம்
அரேபிய பெட்டிகளில் இல்லை.. 
தகர டப்பாவில மூன்று அறைகளில்
பெரிசுமுதல் சிறிசுவரை 
அல்மொண்ட் சாக்லெட்டுகள்
அதன் சுவையை என் பிள்ளைகள்
அரேபிய சாக்லெட்டுகளில் இன்னும்
அனுபவித்ததில்லை...

டப்பாவின் மூடியில்
அச்சடித்த படங்களில் மட்டுமே 
பார்த்த அல்மோண்ட
பரிச்சயமாயிற்று பின்னாளில்
கல்ப் கடைகளில்…

ரெடிமேட் அறிமுகமாகாத காலமது
பிட் பிட்டாய் பழபழக்கும் துணிகள்..
வலியஅண்ணன் முதல் நான் வரை
அடிக்கக் கொடுக்கும் கடை
டவரின் கீழ்பாகம்
அன்று கோட்டு தைக்கத்தெரிந்த ஒரே டெய்லர்
செவிடன் செய்மகண்ணு….
ஒரு முறைகூட அலையவிடாமல்
அடிக்கக் கொடுத்தை தந்ததில்லை..
ஆனாலும் அவரிடமே அடிக்கக் கொடுக்கும்
அந்த ரகசியம் இன்னும் பிடிபடாத அதிசயம்

அத்தாளம் முடிந்து
நண்பர்கள் குழுமம் 
நடுக்கடை டீ கடையில்
புட்டும் பயறும் டீயும் குடிக்கும்...
யார்! பணம் கொடுத்தார்?
ஞாபகமில்லை…
நான் ஒரு நாளும் கொடுத்ததில்லை
வீட்டில் வக்கணையாய் 
உண்டாலும் இன்னும் வேண்டும் 
என்றால் ஆம்! சொல்லும் வயிறு
அன்றைய வயிறு….

மாலையில் துவங்கி மஹ்ரிப் வரை
சிறுவர்முதல் பெரியவர்வரை
மகிழ்ந்து விளையாடும்
நெரிசல் குளங்கள்….

மஹ்ரிபுக்கு மட்டும்
கதவு பக்கம் நின்று தொழ
அடம்பிடிக்கும் நண்பர்களும் நானும்
தொழுகை முடிந்ததும்
முதல் ஆளாய் ஓடிப்போய்
அதிகம் கிழங்கிருக்கும் 
கஞ்சிச் சட்டிக்கு அடி போட...

தராவிஹ் தொழுகை நடக்க...
கபடி விளையாடும் கூட்டம்
அவ்வப்போது
தொழுகை இடைவேளைகளில்
ஓடிவந்து ஒச்சை வைத்து விரட்டும்
ஊர் பெரிதுகள்…
ஒரு நிமிட ஒதுங்கல்களூக்கு பின்
மீண்டும் தொடரும் கபடி..

தரவிஹ் தொழுகைக்கு பின் கிடைக்கும் 
இன்று நின்று போன..
சுக்கு காப்பியும் முறுக்கும்.
அப்போது...
அதிகம் சண்டைகளும், தர்கங்களும் 
நடக்கும் அந்த ஹவ்து கரையின் இரவுகள்...

சுப்ஹீ தொழுதுவிட்டு
பள்ளியில் தூங்கினால்
வரும் பயங்கர கனவுகள்…
பள்ளிக் கூடம் இல்லா நாட்களில்
ளுஹர் வரை கதை பேசும்
பள்ளித்திண்ணை..

பெருநாள் இரவுகளில்
கடைசி பஸ்ஸில் வரும்
நண்பர்கள் முதல் விடுமுறையில்
ஹாஸ்டல் விட்டு வீடுவந்த நண்பர்கள் வரை
அப்ஸரா ஸலூனில்
கூட்டம் போட்டு கதை சொல்லும்…

பெருநாள் வந்து விட்டதை
உறுதி செய்யிம் 
நாகூர் அனிபா பாட்டுகளுடன்
வாடகை டியூப் லைட் கட்டும்
இறச்சிக் கடை.

சங்கு மார்க் லுங்கிகள்
இல்லாமல் பெருநாள் காலைகளில்லை
இண்டிமெட்டும், சார்லியும்
பள்ளியின் பேஃன் காற்றில்
மூச்சு முட்டும்…
(இண்டிமெட்டுக்கு சவுதியில் தடை)

தக்பீர் முழக்கம் கேட்கும் வரை
ஓயாத குளக்கரை கூட்டங்கள்…
நிராழியில் கடைசியாய் குளிக்கும்
காக்கா வரும் வரை தொடரும் தக்பீர்..

தொடர்கிறது நினைவுகள்…
பெருளாதாரம் தேடி சிதறிப்போன
என் நண்பர்கள்! பலரின் அன்றைய முகவரி
மறந்து போகவில்லை….
ஆனால் தொலைந்து போனது அவர்களின்
இன்றைய முகவரி.

No comments:

Post a Comment