Sunday, November 18, 2012

கவிதை! அல்லது வாழ்க்கை!

எல்லைக் கோடுகளில்லாத
விரிந்து பரந்த தேசம்
விதியென்றில்லாமல்
வகுப்பதெல்லாம் நீதி

பார்வையாளர்கள்
பற்றிய அக்கரையில்லாத
பயமறியா மனது

பல சமயம்
தென்றலாய் வருடும்
சில சமயம் தீயாய்ச் சுடும்
மின்னல்களும், இடிகளும்
மழைகளும், மந்தாரங்களும்
சகஜாமாய் மாறி மாறி வரும்
ஒரு மாய பூமி....

வெட்ட வெளிச்சமாக்கும்
தன்னை வெட்டினாலும்
தளராத மனதுடன்
முற்றமும் சுற்றமும் சொல்லி
சமூகம் காக்கும்

அழகான பூக்களை
ரசிக்கும் மனது
அடுத்த நிமிடம்
ரோஜா முட்களை
காரணம் காட்டி
பூக்களின் உலகமே
குருதிகொட்ட வைப்பதாய்
கொடுமை நடை பழகும்.

நேரங்களை காவு கேட்டும்
சுற்றியிருக்கும் சுகந்தம் மறக்கும்
நாற்றமெடுக்கும் நகரத்தில்
நான் தான் ராஜா என்று
முடிசூட்டிக் கொள்ளும்

வசந்தத்தின் வாரிசோ!
என பார்ப்பவரை
பல சமயம் பரவசமூட்டும்
சில சமயம் சிறகொடிந்த
சின்னக் கிளியாய்
தோள்கள் தேடும்.

கண்ணீரில் கரையும்
தண்ணீருக்கே நிரந்தர
நிறம் கொடுக்கும்
பன்னீரில் பாசமாய் கொஞ்சும்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் பேசும்
தீ க்கும் தண்ணீருக்கும்
திருமணம் நடத்தும்

பொய்களின் குரூரத்தில்
மென்மைகள் மலரும்
உண்மைகளின் சாந்தத்தில்
குரூரம் கொப்பளிக்கும்.

சடுகுடு வீதிகளில்
சரளமாய் வேகமெடுக்கும்
நேரான பாதைகளில்
நொண்டி நடக்கும்

இறந்த காலங்களை
நிகழ்காலங்களாக்கி
அலுக்காமல் அசைபோடும்
மாயமுண்ண்டு கவிதைக்கு..

புதிர் போட்டவனுக்கே
தெரியாத விடைகளை
தெரிந்து வைத்திருப்பான்
புரியாத புதிரான பார்வையாளன்..

தெரிவது போல் எழுதினால்
தெரியாதவன் என சொல்லும்
புரியாதவன் போல் பேசினால்
அவன் தான் கவிஞன்
என மெல்லும்.......

தீண்டத்தகாதவன் என
தீண்டியே சொன்னாலும்
எழுது கோல்கள் மட்டும்
”தீட்டு” என்பது எனக்கில்லை என
கண்டும் காணாதது போல்...
கண்டதை பிரசவிக்க
தலை குனியும்

அது தலை நிமிரும் போது
புதிதாய்ப் பிரசவித்த
கவிதை மழலை ஓன்று
தன் பொக்கை வாய் சிரிப்பில்
பரவசமூட்டும்….!!!

No comments:

Post a Comment